ஆண்டாள் நாச்சியார் கதைகள்

ஆண்டாள் வரலாறு

தென் தமிழகத்தில் 63 நாயன்மார்களால் சைவ நெறி தழைத்தோங்கியது போன்றே, பன்னிரு ஆழ்வார்களால் வைணவமும் செழித்தோங்கியது. அப்பன்னிருவரில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார். அவரைப் பற்றிய சில குறிப்புகள் இக்கட்டுரையில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் எனப் புகழப் பெற்ற ஆண்டாள், மிக ஆழ்ந்த தமிழ்ப் புலமை மிக்கவர். வைணவத்தில் ஆன்மீக நெறி வளர்த்த இவரது வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த தெய்வீக வரலாறாகும்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். பின்னாளில் பெரியாழ்வார் எனப் போற்றப்பட்ட இவர் அவ்வூரிலுள்ள பெருமாளுக்கு (வடபத்ரசாயி) புஷ்பக் கைங்கர்யம் செய்து வந்தார். அவர் ஒருநாள்  கோவில் நந்தவனத்தில் பூப்பறிக்கச் செல்கையில், துளசிச் செடியின் அருகில் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டார். இறைவனே தம்மக்களித்தாக எண்ணி அகமகிழ்ந்து, குழந்தைக்கு கோதை எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

பெருமாளின் மீது தான் கொண்டிருந்த பற்றை, ஆழ்ந்த பக்தியை விஷ்ணுசித்தர் தன் செல்ல மகளான கோதைக்குச் சொல்லிச் சொல்லி சீராட்டி வளர்த்தார். சிறு பிராயம் தொட்டு கண்ணனின் விளையாடல்களைக் கேட்டு வளர்ந்த கோதை, தன்னை ஆயர்பாடிச் சிறுமியாகவும், கண்ணனைத் தன் காதலனாகவும் மனதில் வரித்துக் கொண்டாள். கண்ணன் மீதான கோதையின் இப்பிள்ளைக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வேரூன்றியது.

தன் தந்தை புஷ்பக் கைங்கர்யத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்ட கோதை, தான் கடவுள் மீது கொண்ட அளவுகடந்த காதலால் தன் மலர்க்கரங்களால் தொடுத்த பூமாலைகளைத் தான் அணிந்த பின்பே, பெருமாளுக்கு சூட்ட அனுப்புவாள். ஒரு நாள் பூமாலையில் சிக்குண்டிருந்த நீண்ட கேசத்தைக் கண்ட விஷ்ணுசித்தர், மறைந்திருந்து கோதையின் செயலைக் கண்டுணர்ந்து மகளைக் கண்டித்தார்.

பின்னர், வேறு புதியதொரு மாலை தொடுத்துக் கடவுளுக்கு அணிவித்தார். ஆனால் அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பரந்தாமன் கோதை சூடிக் களைந்த மாலையே தனக்கு சூடப்பட வேண்டும் என்று அருளினார். கோதை மணவயதெய்தியபின் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை மறுத்து, மணந்தால் அரங்கனயே மணப்பேன் என்று உறுதியாக மறுத்தாள். செய்வதறியாது தவித்த விஷ்ணுசித்தர் கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக திருவரங்கத்துக்கு அழைத்து வர பணித்தார். கோதை திருவரங்கத்தில் திருவரங்கனோடு ஐக்கியமானாள். தமிழ்ப் புலமை மிக்க ஆண்டாள் மலர்களால் பூமாலை தொடுத்த  போதே, தன் எண்ணங்களால் இறைவன் மீது பாமாலையும்  தொடுக்கத் துவங்கினாள். ஆழ்ந்த கருத்துக்கள் செறிந்த அற்புதப் பாடல்கள் இவரால் பாடப் பெற்றுள்ளன. திருப்பாவை, நாச்சியார் திருமசாலி நூல்களை இவர் இயற்றியுள்ளார். முப்பது பாடல்கள் அடங்கிய திருப்பாவை எனும் தெள்ளமுதில், மங்கையர் நல்மாணாளனை அடைய பாவை

நோன்பு நோற்பது குறித்து விளக்கியுள்ளார். கண்ணன் மீது தான் கொண்ட தெய்வீகக் காதலை கோபிகைகள் மீது ஏறிப் பாடியுள்ளார். 7ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இப்பாடல்கள் 21ம் நூற்றாண்டான இன்று வரை நம்மால் பாடப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறது.

மார்கழித் திங்கள் முழுவதும், அதிகாலையில் குழுக்களாகத் தெருவில் பாடிக்கொண்டே சென்று பெருமாளைச் செவிப்பது நமது மரபாகும். இப்பாடல்கள் மூலம் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களின் ஆன்மீக வாழ்வை அறிந்து இன்புற முடிகிறது. இன்றுவரை கற்பனைக்கெட்டா தெள்ளமுதாக திருப்பாவை விளங்குகிறது. நாச்சியார் திருமொழியில் 143 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் கண்ணனை கணவனாக வரிக்கப் போவதை பாடியுள்ளார். இப்பாடல்கள் மிக முக்கிய வைணவத்தலமான திருப்பதியில் தினமும் பாடப்பட்டு வருகிறது. இப்பாடல்களின் சொற்சுவையும், பொருட்சுவையும் ஆழ்ந்து அனுபவித்து இன்புறத்தக்கன.

“மனத்தை ஒருமைப்படுத்தினால், இறைவனையே அடையாளம் என்று வாழ்ந்து காட்டியவர் நம் கோதை ஆண்டாள்”

Loading

நடை திறக்கும் நேரம்

5 am – 11 pm, 5 pm – 7 pm
ஞாயிறு முதல் சனி வரை

தொடர்புக்கு

தலைவர்  நல்லாம்பள்ளி N.M.நாச்சிமுத்து,
வலைப்பக்க நிர்வாகிகள்
Dr. P. சரவண பிரவீன் குமார், மலேஷியா: +918883355444, +60126968008
திரு. V.N. சண்முக சுந்தரம், கோவை: +919443053517
திரு. N. வெற்றி செல்வன், நல்லாம்பள்ளி: +919842822009
திரு. P. சீனிவாசன், அமெரிக்கா: +1319654-6969

அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோவில் © 2025. All Rights Reserved. Designed By Sentersoft Technologies