அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோயிலின் வரலாறு
ஏரிப்பட்டி என்னும் அழகிய சிற்றூரில் எழுந்தருளியுள்ள நமது (மக்கடையார்) குல தெய்வமான அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோயிலின் வரலாறு பற்றி சில செய்திகள் :

நமது முன்னோர்கள் மக்கடையார், கொலையார், மும்முடியார் ஆகிய மூன்று குலப்பெருமக்கள் குடும்பத்தோடு மாமன் மைத்துனர்கள் அனைவரும் பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து பிழைப்புத்தேடி மேற்கு நோக்கி பொதிமாடுகளில் பயணித்தனர்.
மூன்று குலத்தவர்களும் தத்தம் குலதெய்வங்களின் ஐம்பொன் சிலைகளை பேழையில் வைத்து எடுத்துக் கொண்டு வரும்போது மஞ்சேகவுண்டம்பட்டி என்று பெயர் பெற்ற ஏரிப்பட்டியில் தங்கினார்கள். சில நாட்களுக்குப்பின் மேலும் மேற்கு நோக்கச் செல்ல எண்ணி அவர்களுடைய உடைமைகளையும் பொதி மாடுகளில் ஏற்றிவிட்டு, சாமி சிலைகளை எடுக்க முற்பட்டபோது அவர்களால் எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் நிலத்திலிருந்து பெயர்ந்து வரவில்லை. அதனால் அங்கேயே கோயில், வீடு கட்டி நமது குலதெய்வங்களை ஸ்தாபிதம் செய்து வழிபட்டுக்கொண்டு அங்கேயே தங்கி விடுகிறார்கள்.
நாளடைவில் இவ்வூர்க்கு ஏரிப்பட்டி என பெயர் வழங்கலாயிற்று. கோலயார் குலப்பெருமக்கள் அங்காள பரமேஸ்வரியம்மனையும், மக்கடையார் குலப்பெருமக்கள் மத்துருகோட்டி அம்மனையும், மும்முடையார் குலப்பெருமக்கள் வீரபத்திரசாமியையும் தங்களது குல தெய்வங்களாக வழிபட்டு வந்தார்கள். மூன்று குலதெய்வங்கள் ஐம்பொன் சிலைகளையும் மச்சுக்கோயில் என்று சொல்லப்படும் பழமையான கோவிலில் வைத்து வழிபட்டு வந்தார்கள்.
நெடுங்காலத்துக்குப் பிறகு அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு ஆகம விதிப்படி கோயில்கட்டி சிலை அமைத்து கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர். 1990ம் ஆண்டு அங்காளபரமேஸ்வரி ஆலயத்துக்குத் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன்பின் மக்கடையார் குலப்பெருமக்களும், மும்முடியார் குலப்பெருமக்களும் தனி தனியாக மத்துருகோட்டி அம்மன் ஆலயமும் வீரபத்திரசாமி திருக்கோயிலும் வேண்டும் என்று முடிவு செய்து திருப்பணி துவங்கப்பட்டது .
அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் ஆலயத் திருப்பணி 1991ம் ஆண்டு நல்லாம்பள்ளி திரு. P. மாரிசெட்டியார் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது நமது குலதெய்வ திருக்கோயில் அமைய உடுமலை T.M. கருப்புசாமி செட்டியார், நல்லாம்பள்ளி P. ராமசாமி செட்டியார் ,கோவை K.M. காளியப்ப செட்டியார், மைசூர் வெங்கடராமன் செட்டியார் போன்ற முன்னோர்களும் நம் குலப்பெருமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தார்கள். 1992ஆம் ஆண்டு திரு.P. மாரி செட்டியார் அவர்களின் மறைவுக்குப் பின் நல்லாம்பள்ளி

N.M. நாச்சிமுத்து அவர்கள் தலைமை ஏற்று ஆலயத்து திருப்பணிகளை நிறைவு செய்து, அனைவரது பெருமுயற்சியாலும் அயராத உழைப்பாலும் மத்துருகோட்டி அம்மன் வீரபத்திரசாமி ஆகிய இரண்டு கோயில்களுக்கும் 23.5.1993ம் நாள் திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டது.
1992ஆம் ஆண்டு திரு.P. மாரி செட்டியார் அவர்களின் மறைவுக்குப் பின் நல்லாம்பள்ளி N.M. நாச்சிமுத்து அவர்கள் தலைமை ஏற்று ஆலயத்து திருப்பணிகளை நிறைவு செய்து, அனைவரது பெருமுயற்சியாலும் அயராத உழைப்பாலும் மத்துருகோட்டி அம்மன் வீரபத்திரசாமி ஆகிய இரண்டு கோயில்களுக்கும் 23.5.1993ம் நாள் திருக்குட நன்னீராட்டு செய்யப்பட்டது.
பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து நமது கோயில் மண்டபம் விரிவாக்கப் பணிகள், விநாயகர், முருகர், நவநாயகர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் அமைத்து திருப்பணிகள் செய்து அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 3.2.2006 தைத்திங்கள் 21ம் நாள் நடைபெற்றது.
தற்போது 10.2.2019 தைத்திங்கள் 27ம் நாள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுகிறது. 23.5.1993, 3.2.2006 ஆகிய நாட்களில் முறையே திருக்குடை நன்னீராட்டு பெருவிழாக்களையும், திருப்பணிகளையும் நல்லாம்பள்ளி N.M. நாச்சிமுத்து அவர்கள் தலைமை பொறுப்பேற்று குலப்பெருமக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்தினார்கள்.