மத்துருகோட்டி அம்மன் உற்சவர் (ஐம்பொன் சிலை) பற்றிய தகவல்கள்
2006ம் ஆண்டு ஜனவரி மாதம், தொல்லியல் அறிஞர் முனைவர் பூங்குன்றன் அவர்களை ஏரிப்பட்டியில் உள்ள மக்கடையார் குலதெய்வமான அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோயிலுக்கு அழைத்து வந்து நம்முடைய கோயிலில் பன்னெடுங்காலமாக நாம் வழிபட்டு வரும் உற்சவர் சிலையை ஆய்வு செய்தபோது அவர் சொல்ல சொல்ல எழுதியவை:
செவ்வக வடிவில் அமைந்துள்ள உபபீடத்தின்மேல் அம்மன் வைக்கப்பட்டுள்ளது. உபபீடத்தின் கீழ்ப்பகுதி மலர் இதழ்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளாது. பீடத்தின் மேல் அம்மன் பொருந்திதிவைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. அம்மன், பீடத்தின் மேல் அமர்ந்த நிலையில் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி வைத்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கணுக்கால் வரை காட்டப்பட்டுள்ளது. மார்பில் கச்சி இல்லை. கழுத்தில் மூன்று ஆரங்கள் காட்டப்பட்டுள்ளது. முன் வலது கையில் சூலமும், முன் இடது கையில் கபாலமும், பின் வலது கையில் மழுவும் பின் இடது கையில் பாசமும் காட்டப்பட்டுள்ளன.

காதில் பத்ர குண்டலமும் காதின் மேற்பகுதியில் கொப்பும் அணிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தோள்களிலும் தலைமுடி படர்ந்திருப்பதைப் போல் காட்டப்பட்டுள்ளது. தலையில் ஆறடுக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. அம்மனுடைய காலடியில் அரக்கனுடைய தலை வடிவமைக்கப்பட்டுள்ளது .
நான்கு கால்களோடு கூடிய கோபுரம் (சால விமானம்) செவ்வக வடிவில் அமைந்துள்ளது. முன்புறத்தில் பக்கத்துக்கு ஒரு நந்தியாக இரண்டு நந்ததிகள் உள்ளன. இரண்டு நந்திகளுக்கு இடையில் யோகா பட்டத்தை அணிந்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் முனிவர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரு கரங்களிலும் இசைக் கருவி ஒன்று ஏந்தியுள்ளார். முனிவருக்கு வலது பக்கத்தில் கொண்டியும், இடது பக்கம் தூபஸ்தம்பமும் உள்ளன. கோபுரத்தின் இரண்டாம் நிலையில் இருபுறமும் லிங்கம் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவ மகளிர் உள்ளனர். மகளிர்க்கு இடையில் ஐந்து தலை நாகம் வடிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நிலையில் இடது புறம் சந்திரனும் வலது புறம் சூரியனும் உள்ளன. மூன்றாம் நிலையின் பக்கவாட்டில் மகா நாசிகள் வடிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேல்பகுதி மூன்று கலசங்கள் காட்டப்பட்டுள்ளன.
பின்புறம் முதல்நிலை கீழ்தளத்தில் இரண்டு நந்திகளும் இடையில் லிங்கமும் வடிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தின் பக்கவாட்டில் இரண்டு லிங்கங்கள் உள்ளன மூன்றாம் நிலையில் கொடிகள், குடைகள் வைப்பதற்காக துவாரம் விடப்பட்டுள்ளது. பீடத்தின் அடிப்பகுதியில் மந்திரகொடியம்மை கங்கை செட்டி உபயம் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்தின் அமைப்பைப் பார்க்கும்போது சுமார் 450 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். விமானத்தைத் தாங்கி நிற்க நான்கு போதிகை தூண்கள் உள்ளன.